காதலிக்கிறேன்....

உச்சகட்ட இன்பத்தில்
திளைத்து எழுந்த நேரம்
உணரவில்லை...
வித்து சுமக்கும் என் கருவறை என்று...
வரவிருந்த நாட்களின்
காலையில் எழும்போதே
தலை சுற்றி பசி இல்லை....
தட்டாமாலை வார்த்தைக்கு
முழுதான அர்த்தம் உணர்வேன்...
காதலிக்கிறேன்...

உடலும் மனமும் சோர்ந்து
என்னுள் இன்னொரு உயிர்...
அழகான என் ஒட்டுண்ணி...
தினம் தினம் என் ரத்தம்
உறிஞ்சி சதை தின்று
என்னுள் ஆழமாய் வேர்கள் புதைந்து
வெகு வேகமாய் வளரும்
என் விருட்சம்...
காதலிக்கிறேன்...

இதுவரை அறியாத விஷயம்
ஒரே மாதத்தில் இதயம் துடிக்கும் என்று
மூன்று மாதத்துக்குள் கை கால் வளர்ந்து
மரபாச்சி போல ஒரு விரல் நீள குழந்தை...
வீங்கி நின்ற வயிறு தொடும் வேலை
என் மகவும் உணர்ந்து
செல்லமாய் இடிப்பான்....
காதலிக்கிறேன்...

யாரும் இல்லாது தனிமையில்
நடக்கும் போதும் என் கூட்டுக்குள் நீ
என் துணையாய்...
என் சிரிப்புடன் அழுகையுடன்
என் பசியுடன் உறக்கத்துடன்
எல்லாவற்றிலும் என்னோடு
என்னுள்ளே நானே நெய்த
என் கூட்டு பூழுவாய்...
காதலிக்கிறேன்...

ஒட்டி இருந்த வயிறு
மெல்ல மெல்ல நான் இருக்கிறேன் என்று எட்டி பார்க்க...
என் கால் கட்டைவிரல் பார்த்து
நாட்கள் பல...
ஆசையாய் தான் இருக்கிறது
தலையணை வயிற்றில் அழுத்த
ஒரு முறையாவது தூங்க....
இடுப்பு வளைந்து....
வயிறு தள்ளி... நடையும் மாறி...
ஆடி ஆடி நடக்கிறேன்....
காதலிக்கிறேன்...

உயிர் பிடுங்கும் வலி...
உடல் பிளக்கும் பிரளயம்...
எல்லா உணர்வும் மறுத்து
வேதனை மட்டுமே மூச்சாய்....
உதிரம் கொட்ட
தசை விரியும் துளி துளியாய்...
கர்பக்கூடு திறந்து
வெளிவருவாய்
உன் கருவறை வாசம் விட்டு...
மெதுவாய் உள்ளிழுக்கிறேன்
வெகு நாள் கழித்து
நீண்ட ஒரு மூச்சு...
வியர்வை மழையில் நனைந்து
உயிர் போய் வந்தது வாஸ்தவம் தான்...
ஆனாலும்
காதலிக்கிறேன்...

தாய்மை புனிதம்....
துரோகங்கள் வெறுப்புகள்
கண்ணீர்கள் சோகங்கள்
குழப்பங்கள் கோபங்கள்
என கருப்பு வலிகள்
சாட்டையை சுழற்றினும்....
இன்னும் கறுக்காத என் பிரயாணம்
சொல்லி புரியவைக்க இயலாது...
வன்மமும் புணர்ச்சியும் தாண்டி
தொட இயலா என் மோன நிலையை...
என்றும் காதலிக்கிறேன்... Read Full...

சங்கிலி விதைகள்!!!

சபிக்கிறேன்...
என் உதடுகளை....
வெந்து கருகி இதழ்கள்
ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் வார்த்தைகளை...
மந்திரமாய் சொல்ல எண்ணி
மனப்பாடம் செய்தவை நெருப்பில் கசிந்து
தரையில் ஒழுகும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் இதயத்தை...
உன் சிரிப்பின் விரல்கள்
பிடியில் சிக்கி ஓடாமல்
ஓய்ந்து நின்று விட்ட இக்கணத்தை...
யோசனை கரும்பலகையில்
இருந்த எழுத்துகளை
உன் எச்சில் கொண்டு
அழுந்த துடைத்து விட்டாய்...
கட்டாந்தரையில் மீண்டும் தோற்று
சபிக்கிறேன் என்னையே ஒரு கோடி முறை...
ஆசை செடிகளை மனதின் ஆழத்தில் ஊன்றி நட்டு
நாளையாவது முளைக்கும்
என்று நொடிக்கொரு முறை தரை
பார்த்து நிற்கிறேன்...
மறந்து தான் போனேன்
பாறையாய் இறுகி கனவுகள் உறைந்த நிலம்
உன் மனம் என்று...
ஆலவிருட்சம் முளையிட காணாமல்
மறைந்தே போகும் விதை..
உனக்கு கொடுத்தே காணாமல் கரையும் என் காதலும்...
தெரிந்தே பறிக்கிறேன்
உன் நினைவு களைகளை...
தெரிந்தே புதைக்கிறேன்...
என்னையும் அதனுடன்...
முற்றுபுள்ளி வைத்த பின்னும்
தாண்டி போய்க்கொண்டே இருக்கும்
உன் வார்த்தைகள்..
இன்னும் கிடக்கிறேன்
அதே கட்டாந்தரையில்...
ஆசையாய் நட்ட செடிக்கு
பதில் வளர்ந்து நிற்பதோ
நீர் கேட்காத
என் சங்கிலி தோட்டம்...
வளர வளர இன்னும் என்னை
இறுக்கி தரையில்
ஆழ பதித்து...
சிறகுகள் வளர்ந்தும்
பறக்க இயலாது
சங்கிலி குவியலில்
மெல்ல புதைந்து...
நான்.... Read Full...

உன்னுள் ....

மூடுபனி இருட்டு கண்களை காக்க...
மெல்லிய நிழல்கள் ஒன்றோடு
ஒன்று கலக்கும் இடத்தில்
நானும் நீயும்...
என்னை எடுத்து உன்னுள் கரைத்துவிட்டாய்!!!
சுற்றி சுற்றி நானில்லாமல் மறைந்தேன்
நீ எனக்காக சுவாசிக்க, புசிக்க, சுகிக்க,
நான் கவலை ஏதும் இல்லாது
உன்னுள் மிதக்கிறேன் இதோ...
உனக்காக எல்லாம் கொடுத்து
நானே இல்லாமல் ஆனேனே...
இந்த நான் இல்லாத வெளியில்
உன்னுள் இருந்தும் உன்னை தேடிக்கொண்டே நான்...
உன்னுள் கரைந்தும் நீ இல்லை என்னுடன்
இதயம் ஏங்க
உன் ஸ்பரிச துகள்கள்
என் மேல் படிய
காத்து நிற்கிறேன்...
விம்மி வரும் பாடல்
சோகம் ஏந்தி என்னுளிருந்து!
என் ஓசை உனை உருக்க
நீயும் கரைந்தாய்....
என் அன்பே...
இதோ நீயும் கரைந்து நானும் கரைந்து...
இருவரும் இல்லாது மறைந்தோம்..
எங்கே என தெரியாத அண்டவெளியில்
எல்லாவுமாக கலந்து....
எங்கும் இருந்தும் இங்கு இலாத நிதர்சனம்
இந்த இருட்டு ஏகாந்தத்தில்
உன் முத்த தழுவல் வேண்டி
காத்து நிற்கும்
என் பாடல் மட்டும்.... Read Full...

மரணஓலம்...

என் குற்றுயிர் பிரியும் முன்
உன்னிடம் சில கேள்விகள்...
உனக்கு சில பதில்களும்...
புழுதி படிந்தும், துருவேறியும்
கனத்த மௌனத்தின் சாலையில்.
சிரிக்கும் முகமூடி நிதம் அணியும்
குரூபி நான்...
என் சிரிப்பின் சங்கீதம் எல்லோரும் ரசிக்க
என் காதில் மட்டும்
என் மரணஓலம் இரைச்சலாய்...
இருட்டில் உன்னை தேடுகிறேன்
கேள்வியோடு...
எதனால் உன் என் வார்த்தைகள்
குருதி வழிய வலியோடு
மிச்சமீதி காதலும் வற்றிபோகும்படி
சிறைப்பட்டு...
தனிமை ஜீவனை உறிஞ்சியபடி
எட்டி நின்று பார்க்க...
சதை பிடுங்கி திங்கும்
நம் சச்சரவு வல்லூறுகள்...
உன் கேள்விகளுக்கு பதில் இருந்தும்
வலியின் உச்சத்தில்
விடைகள் மறுத்து...
அன்பு மட்டுமே தேடி
உனக்காக சோகமூட்டை சுமந்த அகதி நான்
எப்படி மறந்தாய் இதை...
சிரிப்பும் அணைப்பும் நிறைந்த
நினைவுகள் பழுப்பேறி போய்...
உன் குற்றச்சாட்டு குரல் கேட்கையில்
என் இத்தனை நாள் வாழ்வும்
ஆயிரம் பேர் பார்க்க
கழு ஏறுவதை உணர்கிறேன்...
என் அன்பாய் இருந்தவனே
உள்ளுக்குள் கொப்பளிக்கும் என் கோபத்தின்
உச்சத்தில் இதோ அறுக்கிறேன்
இறக்கும் கணத்திலும்
என் உதடுகளை....
உயிர் பிரிந்தாலும் என் முகம்
நீ பார்த்து மனம் கனத்து
உன் கோப வெறுப்புகள் மறந்து
முத்தமிட்டு வழியனுப்ப நினைத்தால்
உதடுகள் அற்ற என் கோர முகம் வரவேற்கும்
என் வலி விகாரம் காட்டி... Read Full...

தீ மூட்டிவிடு...




வறண்ட வெற்று பாலை நிலம்
மெத்தென நெருப்பு
கொழுந்து விட்டு எரிய
ஒற்றையாய் நான்...
என்னை கொளுத்த உனக்கு
தீப்பந்தம் வேண்டாம்!
எரிமலை குழம்பு வேண்டாம்!
கைப்பிடி கானல் நீரும்
பசும்புல்லின் நுனியும் போதும்...

விடிந்தும்
இன்னும் கொழுந்துவிடுவேன்...
என் வேர்கள் சூறாவளியில் நிலை குலைந்து...
உயிர் போராட்டத்தில் நான்
படபடத்து...
மரணத்தை நோக்கி...
சட்டென மரித்தால் நன்றே...
ஒரு மழைத்துளி பட்டால் மரிப்பேனோ?
என் தவம் கண்டு
தரை நோக்கி வந்த மழையும்
நான் பார்க்கையில்
மீண்டும் விண்ணோக்கி...

பார்...
உன் முத்த முட்கள் பட்டு
கிழிந்து தொங்கும் என் கன்னத்தை...
கேள்...
உன் நிசப்த வெடி இரைச்சலுக்கு
என் இதயம் துடிக்கும் தாளத்தை...
ரசி...
என் வான நட்சத்திரங்கள்
உன் கண் பார்த்து கடைசியாய்
கண்சிமிட்டி
கல்லறையில் இறக்கும் நொடிகளை...

ஒரு வேளை
என் கனவுகளை தின்று
என் கண்ணீரை குடித்தால்
சத்தமின்றி மடிந்து இறப்பேனோ...
தீ சிறகுகள் மெது மெதுவாய் திசுக்களை
சாம்பலாக்கி மெல்ல
காற்றுடன் கை கோர்த்துவிட்டு
நகைக்கும்...
மொத்தம் எரிந்தும்
ஓரத்தில் ஒரு நப்பாசை...
தீ மூட்ட வந்த உன் கை
தீ அணைக்க வருமென்று...

நெருப்பு என்னை கரைக்கும் வரை
உன் அணைப்பை தேடி கொண்டே...
நீ இல்லை
இன்னும் சோகத்தின் பிடியில்
என் முடிகற்றைகள்
கருப்பு தீக்கனலாய்
எரிந்து கொண்டு...
இது தான் என் கடைசி இரவென்றால்..
முற்றுபுள்ளி வைக்கும் முன்
நான் பாடம் எடுக்கிறேன்
என் அன்பே...
உனக்கு...
ஆசை உடன்
எப்படி கொலை செய்வது என்று... Read Full...

என் காதலன்களின் பட்டியல்...

நெஞ்சின் வாசம் தூக்கிபோகும்
என் நினைவுகளின் கல்லறைக்கு...
காலம் சுழல சுழல
நான் என்ற உணர்வு
மருகிபோய்...
எது நான் என்ற வினாவுக்கு
விடை தேடுகிறேன்...
தேட கையில் பூதகண்ணாடியும்
வரை படமும்...
நடந்து நடந்து களைத்து போகும்
கால்கள்...
என் வழியில் ஒரு மானுடன்
காதல் பார்வையுடன்...
கால் பிடித்து விட
கண்ணயர்ந்தேன்...
கண் விழித்து அவன் கை விலக்கி
மேலும் நடந்தேன்...
தாகம் மிக
சுற்றி பார்க்க
சூரியனை பிரதிபலிக்கும் நீர் தேக்கம்
தண்ணீர் கையிலெடுக்க
என்னை பார்த்தான்
இவன் காந்தர்வன்....
அவன் கை பற்றி நீரில் மிதந்தேன்
உடலும் மனமும் வழியவழிய...
இதழில் முத்தமிட்டு உயிரை
குடித்தான்....
களைத்து அவன் உறங்க
நான் நடக்கிறேன்...
வழி முழுக்க
முட்கள்...
வழிப்போக்கன்
வந்தவன் கசிந்த ரத்தத்தை
உரிந்துகிறான்...
அவனையும் தள்ளிவிட்டு
நடக்கிறேன்
கண்ணோடு கண் நோக்கி
நீ அழகு என்றான்
ஒரு தேவன்...
புளகாங்கிதம்
அவன் ஸ்பரிசத்தில்
ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகுகள்
ஒன்றாய் வருடியது போல்
இவனையும் விடுத்து நடந்துகொண்டே இருக்கிறேன்...
தேடி தேடி நடக்கும் வழி
இமைக்கும் நேரமெல்லாம்
காதல்...
விழுந்து எழுந்து
திளைத்து உணர்ந்து
காதலன்களின் முகம் நியாபகம் இல்லை
முகங்களின் மேல் முகம் படிந்து....
விகாரமாய்
விஸ்வரூபம் ...
ஆயினும் என் காதல்
சிறு நீரோடையாய் போகும் வழியெல்லாம்
படர்ந்து...
விரவி...
காதலன்கள் ஓலம் காதில் அயராது...
ஆயினும் என் தேடல் நிற்காமல்...
என்னை வலியுறுத்த காதல்
தேவையில்லை
நானே காதலாகினேன்... Read Full...

வட்டம்!!!

எப்போதும் நடக்கும் பாதை
இயந்தரதனமாய் நடப்பேன்
என்னுடைய அறை முழுக்க
வாடை!!!
இன்னதென்று பிரித்தெடுக்க முடியாது...
நாசியில் பட்ட நேரம்
திடுக்கிட்டு கண் திறந்து பார்ப்பேன்
ரத்தமும்
மலக்கழிவும்
எச்சமும்
நோயும்
மெல்ல கசியும் உயிரும்
கலந்து தரும் வாடை அது...
எதன் சதவிகிதம் அதிகம் என்பது
அன்றைய நாளை பொறுத்து!
எத்தனை நாள் முயன்றும்
பழக்கபடாத வாடை...
கண் முன் கசியும் உயிர் நாளும்
கண்டு எத்தனை நாள் இன்னும் மிச்சம்
என்று கணக்கிடும்
சித்திர குப்தன் வேலை எனக்கு!
என்றோ உயிருடன் இருந்து
இப்போதோ நலிந்து
மெல்ல வாடை கசிய
என் முன் நிஜ மனிதர்கள்...
சொந்த பெயர்கள் மறந்து
நோயின் பெயரால் கூப்பிட படும்
கூடுகள்...
சொந்தங்கள் சுற்றமாய் சில நேரம் கேட்பார்கள்
இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று
மனப்பாடம் செய்து வைத்த பதில்
கூச்சமின்றி என் வாயில் இருந்து...
நோயின் வீரியம்
மிச்சமீதி இருக்கும் தெம்பு
எல்லாம் பொறுத்து இத்தனை
நாள் என்ற என் கணக்கை...
வருவு செலவு கணக்கு கேட்ட திருப்தியில்
அவர்கள் சமாதானமாய் செல்வார்...
சில வேளை சில கூடுகள் பேசும்
பக்கம் சென்று
இன்னும் எத்தனை நாள் என்று நான்
துலா தட்டை தூக்கி பார்க்கும் நேரம்...
மெல்லிய இருட்டின் பயம்
கண்ணில் தெரிய
என் கை பற்றி சிறிது நேரம் பேச கெஞ்சும்
மனிதம்
எனக்கும் ஆசை தான்...
கை பற்றும் அந்த நொடி
மனம் மெல்ல அசைபோடும்
இவர் வாழ்கை எப்படியோ என்று
எத்தனை முறை சிரித்தாரோ
எத்தனை முறை அழுதாரோ
எத்தனை முறை தோற்றாரோ
ஆயினும்
அடுத்த நொடி புத்தி பேசும்
இது சரியான நடைமுறை அல்ல என்று...
நான் கொடுத்த உறுதிமொழியில்
நெஞ்சுக்கும் எண்ணங்களுக்கும்
இடமில்லை...
மனம் லயிக்காது
புத்தி மட்டுமே செயலிட வேண்டும் என்று
சத்தியம்...
கை நீட்டி சிறிது மனிதம் தேடும்
கையை விலக்கி
கல்லை போல்
வேறு கூடு நோக்கி
என் நடை...
இன்னுமொரு உயிர் அழுகி
வரும் வாடை
என்னில் இருந்து
என்பதை புரிந்தும்
வட்ட வட்டமாய்...
நான்!!! Read Full...

கள்ளன்!!!

மெல்லிய குளிர்
கண்கள் இருட்டை உள்வாங்க
உன் பேச்சு காதோரம் மெதுவாய்
என் வெளிச்ச வேதனை நீ
கரைகிறேன் ...
கரைகிறேன்...
இதழ் ஈரம் காதுமடலை சுட்டெரிக்க
எப்படி சாத்தியம் உன்னால்
ஒரே நேரம் உயிர் கொடுத்து உயிர் எடுக்க...
ஆழிபெருக்கில் அடித்து செல்லும் சிறு துரும்பாய்
நான்
உன்னால் அழுகிறேன் சிரிக்கிறேன்
ஒரே நிமிடகரைசலில்
நான் நீயாக
நீ நானாக
கரைகிறேன்...
கரைகிறேன்...
உன் வார்த்தைகள் எனை எழுப்ப
என் பாட்டோ உனை தாலாட்டும்
இத்தனை நாள் சுமந்த சோகம்
நொடி நேரம் இடம் மாறி
சுமைதாங்கியும் என்னோடு
கை கோர்த்து நடக்க
கரைகிறேன்...
கரைகிறேன்...
இறந்த பின்னும் உயிர் பெற்று எழ
நீ
மட்டும் தான் காரணம் Read Full...

காத்திருப்பேன் !!!


இனிய நினைவு போர்வை இறுக்கி போற்றி,
பேச்சு தலையணை கட்டி பிடித்து,
தனிமை குளிர் விரட்டி
தூக்கம் தேடும் இக்கணத்தில்
ஏனோ ....
உன் சிரிக்கும் பார்வையும்
உன் மயிலிறகு மனதும்
கதகதப்பாய் என்னை சுற்றும்...
என் இமை இரண்டும்
உறக்க சுள்ளிகள் எரிக்க
உன் ஞாபக புகை
ஆற்று சுழலாய்
இந்த பேதை நெஞ்சின் அலைகளை
இன்னும் தத்தளிக்க வைத்து....
ஆனால்
நீ உறங்கு
என் அன்பே
என் புன்னகை சூடு பிடித்து...
உனக்கான என் வாசம்
சிறை அடைத்த பெட்டகம்
இதோ
என்னிடம்....
மீண்டும் உன்னை காண
நேர்கையில் உன்னிடம்
கேட்பேன் பண்டமாற்று!
உன் கனிவு பார்வையை
மொத்த விலைக்கோ
அல்ல
குத்தகைக்கோ... Read Full...

More sidhar pattu!!!


சிவவாக்கிய சித்தர்

* நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணு என்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்
கறிசுவையை அறியுமோ!!!

பத்ரகிரியார்
* ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலன்னை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி
சுகம்பெருவது எக்காலம்!!! Read Full...